
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் செயற்கை நுண்ணறிவுடன் வடிவமைக்கப்பட்ட ரோபோ நாய்க்கு ‘சாம்பக்’ என பெயரிடப்பட்டிருப்பதை எதிர்த்து, பிரபல குழந்தைகள் இதழான ‘சாம்பக்’ பத்திரிகையை வெளியிட்டு வரும் டெல்லி பிரஸ் பத்ரா பிரகாஷன் பி.வி.டி. லிமிடெட் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதில், வர்த்தக முத்திரை மீறல் மற்றும் வணிக சுரண்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுரப் பானர்ஜி, பிசிசிஐக்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்களில் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
பத்திரிகை நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அமித் குப்தா, “சாம்பக் என்பது 1968 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு பிரபலமான குழந்தைகள் பத்திரிகை.
IPL என்பது ஒரு வணிக நோக்கமுள்ள நிகழ்வாக இருப்பதால், அதன் ரோபோ நாய்க்கு ‘சாம்பக்’ என்று பெயரிடப்பட்டு பயன்படுத்தப்படுவது, பதிவுசெய்யப்பட்ட வர்த்தகமுத்திரை மீறலாகும்” என்று வாதிட்டார். மேலும், இது பத்திரிகையின் மதிப்பையும் அடையாளத்தையும் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
மாறாக, BCCI சார்பில் வழக்கை எதிர்த்து ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே. சாய் தீபக், “‘சாம்பக்’ என்பது ஒரு பொதுப் பெயராகவும், ஒரு பூவின் பெயராகவும் உள்ளது. இது பத்திரிகைக்கே சொந்தமானது அல்ல. மேலும், பல இலக்கியங்களில் ‘சாம்பக்’ பெயர் கதாபாத்திரங்களாகவும் வந்துள்ளது” என வாதிட்டார்.
நீதிபதி பானர்ஜி, “விராட் கோலியின் செல்லப்பெயர் ‘சிகு’, அது சாம்பக் கதாபாத்திரத்துடன் ஒத்துப் போகும் என்றால் அவர்மீது வழக்கு ஏன் தொடரப்படவில்லை?” எனக் கேட்டார். இந்த வழக்கு ஜூலை 9ஆம் தேதி மீண்டும் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.