ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான் பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உலக வங்கி மற்றும் உலக நாடுகளின் உதவி பெற்று வரும் பாகிஸ்தான், தற்போது நடைபெற்ற மோதல் தங்களது நாட்டிற்கு பெரிய இழப்பாக மாறி வருகிறது என தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்கு பிறகு பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன்கள் அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசின் பொருளாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.

அந்தப் பதிவில், “எதிரி நாட்டால் ஏற்பட்ட பெரும் இழப்புக்கு பிறகு சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன் குறித்து பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியால், நாட்டின் பொருளாதார நெருக்கடியை குறைக்க உதவுமாறு சர்வதேச கூட்டாளிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

ஆனால் பொருளாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பதிவு முற்றிலும் தவறானது என பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் பொருளாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.