ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான வி.சி சந்திரகுமார் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, இந்த தேர்தலின் வெற்றிக்கு காரணம் தமிழக அரசு மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் தான்.

இந்த தேர்தலில் மட்டும் அல்ல, வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். இந்த வெற்றி பெரிய வெற்றி என்றார். அதன் பின் அவர் கூறியதாவது இறந்தவர்களை இழிவாக பேசும் போக்கை நான் கண்டிக்கின்றேன். பெரியார் மறைந்த பின்பு அவரைப் பற்றி அவரது அவதூறாக பேசுவது அருவருக்கத்தக்கதாகும். அதுமட்டுமின்றி பெரியார் மண்ணில் இதுபோன்று பேசும் சீமான் மனித பிறவியே கிடையாது. பெரியாரின் சிந்தனை மீது அதீத நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்காக நான் நாத்திகவாதியாக இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.

வேப்பமனு தாக்கல் செய்யும் போது என்னுடைய நண்பர் எனது கையில் எலுமிச்சை பழத்தை கொடுத்தார். 10 ஆண்டுகளுக்கு பின்பு, தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும் என்று கூறிய அவர் அந்த கனியை என்னிடம் கொடுத்தார். அதை நான் மனு தாக்கல் செய்யும் போது எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் என்னோடு வந்தவர்கள் அனைவரும் அரசியல் தலைவர்கள். அவர்களிடம் அந்த கனியை கொடுத்து வைத்திருக்க சொல்வது மரியாதையாக இருக்காது என்று நினைத்து நானே வைத்துக் கொண்டேன். இதில் எதுவும் மறைப்பதற்கு இல்லை. எனக்கு மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. குறை கூற நினைப்பவர்கள் இது போன்ற சர்ச்சையை உருவாக்குகின்றனர் என்று கூறினார்.