இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 689 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கொரோனா பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது.

இருப்பினும் கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருக்கிறது. அந்த வகையில் நாளை முதல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், உள்நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் என அனைவரும் 100 சதவீதம் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். இந்த அறிவிப்பால் மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம். மேலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என நடைமுறைக்கு வருகிறது என்று கூறினார்.