தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி(42) என்ற மனைவி உள்ளார். இவர் மணலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு தீபன், ரித்திக் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர்.

நேற்று வழக்கம்போல கணவன் மனைவி இருவரும் பள்ளிக்கு சென்றனர். பின்னர் அருண் பிரசாத் மணலூருக்கு சென்று தனது மனைவியிடம் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினார். இதனையடுத்து தணிகையேஸ்வரி தனது கணவரை செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு சென்ற தணிகையேஸ்வரி தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அருண்பிரசாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் எனது வீட்டிற்கும், பக்கத்து வீட்டுக்கும் சென்று வர இருந்த பொது பாதையை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து வேலி அமைத்தார். இதுகுறித்து கேட்டபோது என்னை மிரட்டுகிறார். இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலில் இருக்கிறோம் என அருண் பிரசாத் எழுதியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.