
டெல்லியில் வசித்து வரும் 30 வயதான பெண் ஒருவர் தன்னுடைய விபரங்களை பயன்படுத்தி பேக் ஐடி மூலம் ஒருவர் தொந்தரவு செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னுடைய பெயர் மற்றும் விபரங்களை வைத்து பேக் ஐடி உருவாக்கி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அவதூறாக பேசுவது மற்றும் தொடர்ந்து தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த ஃபேக் ஐடி எந்த மொபைல் எண் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து அந்த எண்ணிற்கான சிம் கார்டு எந்த பகுதியில் உள்ளது என்பதையும் விசாரணை நடத்தி கண்டறிந்துள்ளனர். அதில் அந்த சிம்கார்டு உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசிப்பூர் பகுதியில் வாங்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.
அதனை வைத்து அதன் உரிமையாளரின் தற்போதைய இடத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதன்படி டெல்லியில் உள்ள நங்கோலி பகுதியில் 26 வயதான இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து ஒரு சிம்கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளதாகவும் தனது கணவர் சமூக வலைதள பக்கங்களில் உள்ள இளம்பெண் ஒருவருக்கும் தன் கணவருக்கும் இடையே தொடர்பு இருக்குமோ என சந்தேகித்து உள்ளதாக கூறினார்.
மேலும் தனது கணவரின் மொபைலில் இருந்து அந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அதற்கு அந்தப் பெண் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பின்னர் தன் கணவர் மீது உள்ள சந்தேகத்தால் அந்த இளம் பெண் பெயரில் ஃபேக் ஐடி ஒன்றை தொடங்கி தனது கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதாகவும், மேலும் அந்தப் பெண்ணின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின் அப்பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.