கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா அருகே, கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு சம்பவம் பெரும் விபத்திற்கு முன்னர் தவிர்க்கப்பட்டது. மைசூரிலிருந்து ராஜஸ்தானின் உதய்பூருக்குச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரத்தில், சன்னபட்னா தாலுகாவின் வந்தரகுப்பே பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

அதனால் ரயிலின் முன் பகுதியில் அடர்ந்த புகை எழுந்ததை முதலில் கவனித்த லோகோ பைலட், மிகுந்த சுறுசுறுப்புடன் ரயிலை உடனடியாக நிறுத்தி, விபத்துகளை தவிர்த்தார். இதனைத் தொடர்ந்து, ரயில்வே மற்றும் தீயணைப்பு துறையைத் தொடர்பு கொண்டு சம்பவத்தைச் சமாளித்தார்.

இந்த திடீர் சம்பவம், ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகளை பதற்றத்தில் ஆழ்த்தியது. கடந்த வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், தீயின் தாக்கத்தால் என்ஜினின் ஒரு பகுதி சேதமடைந்தது.

ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவு அல்லது மின்கசிவு போன்ற காரணங்களால் தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ விசாரணை முடிவதற்குள் தீவிபத்தின் காரணம் உறுதி செய்ய முடியாது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வீடியோ சான்றுகள் ரயில் பாதைக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

தீ கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, மாற்று எஞ்சின் ஒருகட்டி ரயிலில் பொருத்தப்பட்டு, பயணத்தை மீண்டும் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், இனி இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் லோகோ பைலட்டின் சரியான நேர செயல்பாடு, நூற்றுக்கணக்கான உயிர்களை காக்க உதவியதுடன், ஒரு பெரிய விபத்தை தவிர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.