கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மக்கள் பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் வருகின்ற 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் எனவும் பொள்ளாச்சி வழியாக தாம்பரத்துக்கு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கின்றது.

இது பற்றி பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. டிக்கெட் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி விடுகின்றார்கள். இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருக்கும் போது தென் மாவட்டங்களுக்கு இயக்க வேண்டிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது.

ஆகையால் சென்னையில் வசிக்கும் பொள்ளாச்சி, கோவையை சேர்ந்த மக்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும். கோவை ரயில் நிலையத்தில் போதுமான அளவு இட வசதி இல்லை. போத்தனூரில் அனைத்து வசதிகளும் இருக்கின்றது. ஆகையால் போத்தனுரிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.