தமிழக அரசியல் மற்றும் திரைத்துறை இடையேயான உறவு இன்றுவரை பிரிக்க முடியாததாகவே உள்ளது. விஜய், முன்னணி நடிகராக இருந்து, “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, அரசியலில் களமிறங்கியுள்ளார். அவரது கட்சியின் கொள்கைகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கொள்கையுடன் அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இது பெரியார் வழி திராவிட சிந்தனைகளின் பின்புலத்தை வெளிப்படுத்தும்.

விஜய், தனது அரசியல் கருதுகோள்களை திராவிட சிந்தனைகளை மையமாக வைத்து அமைக்க முயல்வதாக தெரிகிறது. குறிப்பாக, பெரியாரின் 146-ஆம் பிறந்த நாளில் அவரது நினைவிடத்தில் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது, அவர் சமூகநீதி, சமத்துவத்தை வலியுறுத்தும் திராவிட சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்க உள்ளார் என்பதைக் காட்டுகிறது. இது தமிழகத்தின் அரசியல் நிலவரத்திற்கு சம்மந்தப்பட்ட பல கேள்விகளுக்கு வழிவகுக்கின்றது.

ஆனால், விஜய் ஆன்மிக அரசியலில் எவ்வாறு செயல்படப்போவார் என்பதற்கான பதில் இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை. தமிழக அரசியலில் திராவிட சித்தாந்தம், சமூகநீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தவிர்த்து வெற்றி பெறுவது கடினம். விஜய் இதனைக் கவனத்தில் வைத்து தனது அரசியல் பாதையை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சமத்துவம், சமூக நீதி, திராவிடம் ஆகிய பாதைகளை தேர்வு செய்து பயணிக்க போகிறாரா.? இல்லை எனில் தனக்கென தனி பாதையை உருவாக்கி பயணிக்க போகிறாரா.? என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. மேலும் இந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் பதில் கிடைக்கும் என்று அவருடைய ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் தமிழக அரசியலில் விஜயின் அரசியல் வருகை கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தம் என்று கூறுவதால் 2026 தேர்தலில் விஜய்க்கு என்ன மாதிரியான ரிசல்ட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயத்தில் விஜயின் கட்சியில் அனுபவமில்லாத நிர்வாகிகள் இருப்பதும் ஒரு கவனிக்கத்தக்க விஷயம் தான். எனவே அனுபவம் இல்லாத நிர்வாகிகளை வைத்து கட்சியை திறம்பட நிர்வாகத்தை விதை ஜெயிப்பாரா இல்லையா என்பதை காண அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.