இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் நடிகர் சையத் மஜீத் நடிப்பில் பைரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அப்போது இப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அமேசான் பிரைம் OTT-யில் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. இந்த படம் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் இப்படத்தின் உருவாக்கம் பலரையும் கவர்ந்தது.

 

இந்நிலையில் சமீப காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டு வருவதை குறிப்பிட்ட சையத் மஜீத் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக வலைதளங்களில் சகோதரர் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் என் நண்பரின் உதவியுடன் ‘பைரி’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயனிடம் கொண்டு சென்றோம்.

அப்படத்தை பார்த்தவர் எங்களை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது படத்தின் இயக்குனர் ஊரில் இல்லாததால் அவரால் சந்திக்க முடியவில்லை. இதை அறிந்து கொண்டவர் இயக்குனரை நாளை வரச் சொல்லுங்கள் நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் இயக்குனர் உட்பட படக்குழுவினர் அவரை சந்தித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தோம்.

சகோதரர் சிவகார்த்திகேயன் எங்களைப் போல் வளரும் கலைஞருக்கு பெரிய ஆதரவாக இருக்கிறார். உங்கள் கிண்டல் கேலிகளால் அதைக் கெடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.