அமெரிக்க நாட்டில் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு 12:50 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து எல் பாசோ ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக ஷெரீப் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இது குறித்து ஷெரீப் அலுவலகம் கூறியதாவது “பால்கன் பகுதியில் கேட்கப்பட்ட துப்பாக்கி சூடு சத்தத்தினால் பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக ஷெரீப் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை. மேலும் கடந்த சனிக்கிழமை அதே பகுதியில் நடந்த கார் கடத்தலுக்கும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதோடு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை அதிகாரிகளுடன் மத்திய புலனாய்வுத் துறையும் இணைந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளது.