தனியார் துறை வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுக்கான (ஏடிஎம் கார்டு) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை வருகின்ற 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் படி டெபிட் கார்டுகளுக்கு வருடத்திற்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 199 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் கோடக் மகேந்திரா வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்த தகவல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டணங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

அதன்படி குறைந்தபட்ச இருப்பு தொகையை வைக்க தவறினால் 6 சதவீதம் அதாவது 600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். நிதி சாரா காரணங்களுக்காக வழங்கப்பட்டு திரும்ப அனுப்பப்படும்  காசோலைகளுக்கு ஒவ்வொரு முறையும் ரூபாய் 50 கட்டணம், டெபாசிட் செய்த பிறகு திரும்பிய காசோலைக்கு ஒவ்வொரு முறைக்கும் ரூபாய் 200 கட்டணம், தொலைந்த அல்லது திருடப்பட்ட ஏடிஎம் கார்டை மாற்றுவதற்கு ரூபாய் 200 கட்டணம், போதுமான பணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்ட மற்றும் உள்நாட்டில் பணம் எடுத்தலுக்கு ரூபாய் 25 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஒரு மாதத்தில் ஒரு கார்டு இல்லா பணத்தை எடுக்க கட்டணம் கிடையாது. அதை தாண்டி எடுக்கும் போது ரூபாய் 10 கட்டணமாக வசூலிக்கப்படும்.