தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் தலைமையாசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல், கெட்டதொடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. அப்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தெலுங்கு ஆசிரியர் நரேந்தர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனியார் தொண்டு நிறுவனம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக தலைமை ஆசிரியை சாரதாவிடம் 15 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தெலுங்கு ஆசிரியருக்கு சாதகமாக இருந்துள்ளார். ஆகையால் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.