நதிகள் அனைத்து உயிர்களின் வாழ்விலும் ஒரு முக்கியமான ஆதாரமாக திகழ்கிறது. நம்  வாழ்வில் நதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்கு வருடந்தோறும் மார்ச் 14ம் தேதியன்று சர்வதேச அளவில் ஒரு தினமானது (International Day of Action for Rivers) கொண்டாடப்பட்டு வருகிறது. நதிகளில் சுத்தமாக பராமரிப்பது, அழியும் நதிகளை மீட்டெடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.

இது சர்வதேச நதிகள் அமைப்பு எனும் சமூக அக்கறை உள்ள நிறுவனத்தின் முன்னெடுப்பு ஆகும்.  மனித நடவடிக்கைகளால் நதிகள் உள்ளிட்ட நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வாறு கடுமையாக மாசுபடுகிறது என்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக International Day of Action for Rivers நாள் உருவாக்கப்பட்டது. நதிகள் மனித உயிர்களை எவ்வாறு தக்க வைக்கிறது என்பது குறித்த முக்கியத்துவத்தை  உணர்த்தும் நாளாக இது இருந்து வருகிறது.

நவீனமயமாக்கல் மற்றும் தொழில் துறை நடவடிக்கைகள் இந்த நீர்நிலைகளை எவ்வாறு  மாசடைய செய்கிறது என்பது பற்றியும் இது பேசுகிறது. அதோடு இந்த நாளில் உலகளவில் நதிகளை சுத்தப்படுத்துதல், ஆறுகளை காக்க  என்ன செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல தன்னார்வ செயல்பாடுகள் நடத்தப்படுக்கிறது.