நாமக்கல் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டினார். இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவுசெய்து அதன் வாயிலாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆகவே விரைவில் இத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ராகி மாவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பின் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.