டெல்லி அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது பெங்களூரு அணி..

2023 ஐபிஎல் தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மாலை 3:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் பாப் டூபிளெஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் களம் களமிறங்கினர். இருவரும் நன்றாக இன்னிங்க்ஸை தொடங்கி அதிரடியாக ஆடி வந்த நிலையில் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் (22 ரன்கள்) மார்ஷ் வீசிய 5வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேற்றினார்.

இருப்பினும் மற்றொரு துவக்கவீரர் விராட் கோலி லோம்ரோர் உடன் கைகோர்த்து சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அதன் பின் கோலி (34 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 50 ரன்கள்) அவுட்டானார். பின் லோம்ரோர் 26 ரன்கள் சேர்த்து அவுட் ஆக, அடுத்து வந்த ஹர்ஷல் படேல் 6 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனிடையே களமிறங்கி அதிரடியாக ஆடி வந்த மேக்ஸ்வெல் 24(14) ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 2வது பந்தில்  அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து  டக் அவுட் ஆகி வெளிறினார்.

 

பெங்களூரு அணி 14.2 ஓவரில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்தது. அப்போது சாபாஷ் அகமது (20 ரன்கள் ) மற்றும் அனுஜ் ராவத் (15 ரன்கள்) இருவரும் கடைசியில் விக்கெட் விடாமல் பொறுப்பாக ஆடியதால் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல்மற்றும் லலித் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்..

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பிருத்வி ஷா (டக் அவுட்) ரன் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து வெயின் பார்னெல் வீசிய 2வது ஓவரில் மிட்செல் மார்ஷ் (டக் அவுட்) கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.. அடுத்து 3வது ஓவரில்  யஷ் துல் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.. டெல்லி அணி 2 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது..

கேப்டன் டேவிட் வார்னர் சற்று தொடர்ந்து அடித்து 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரும் 6வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். டெல்லி அணி 6 ஓவர் முடிவில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.. அதன் பின் அபிஷேக் போரெல் 5  ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.. இதையடுத்து அக்சர் பட்டேல் – மனிஷ் பாண்டே இருவரும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் ஆடிவந்த நிலையில், அக்சர் படேல்  21 ரன்னில் அவுட் ஆனார்..

இருப்பினும் மறு முனையில் மனிஷ் பாண்டே மற்றும் தனி ஒருவனாக சிறப்பாக அடி அரை சதம் (38 பந்துகளில் 50 ரன்கள்) அடித்து அவுட் ஆனார். இதனால் டெல்லியின் நம்பிக்கை தகர்ந்தது. இதையடுத்து அமன் 18, லலித் யாதவ் 4 என மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, கடைசியில்  அன்ரிச்  நோர்க்யா 23 மற்றும் குல்தீப் யாதவ் 4 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர்..

டெல்லி அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தரப்பில் வைசாக் விஜயகுமார் 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2விக்கெட்டுகளும், வெயின் பார்னெல், ஹசரங்கா, ஹர்ஷல் படேல்  ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

4 போட்டிகளில் விளையாடி பெங்களூர் அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடர்ந்து 5வது தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் அந்த அணி புள்ளி பட்டியல் கடைசி இடத்தில் உள்ளது..