ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இந்த முறை அபாரமாக செயல்பட்டு வருகிறது. இன்றுவரை நடைபெற்ற 54 போட்டிகளுக்குப் பிறகு, 16 புள்ளிகளைப் பெற்ற ஒரே அணி RCB தான். இதனால் பிளேஆஃப் கட்டத்திற்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுவரை ஒரு தடவையும் ஐபிஎல் கோப்பையை வெல்லாத இந்த அணி இந்த முறை பட்டத்தை கைப்பற்றும் என்பதில் ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

RCB அணியின் தொடர் வெற்றிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கணவர் தனது மனைவியுடன் RCB ஜெர்சியை அணிந்து நிற்கிறார். அவரிடம் நீங்கள் ஆர்.சி.பி. ரசிகரா என்று கேட்கப்படும்போது, “ஆம், நான் ஆர்.சி.பி ரசிகன். இந்த முறை அவர்கள் கோப்பையை வெல்லவில்லை என்றால், நான் என் மனைவியை விவாகரத்து செய்கிறேன்” என்கிறார். இந்த வீடியோ நகைச்சுவை நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதெனக் கருதப்பட்டாலும், பலரும் அதை விமர்சிக்கிறார்கள்.

இந்த காணொளியை பார்த்த பலரும் சமூக ஊடகங்களில் கலாய்ப்பு பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். ஒருவர், “மாமா, இப்பவே ஒரு வழக்கறிஞரை தேடி வையுங்க… RCB கோப்பையை வெல்லவே மாட்டாங்க” என பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “இப்போது அவர் ஜீவனாம்சம் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இன்னொரு ரசிகர், “மனைவியே RCB கோப்பையை வெல்லக்கூடாது என்று பிரார்த்தனை செய்திருக்கலாம்” என எழுதியுள்ளார்.