ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா உடன் தகராறு ஏற்பட்டதால் அம்மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கருக்கு மாநிலங்களவை தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து நமக்கும் ஏதும் கிடைக்காதா (புதிய பதவி) என நமது ஆளுநருக்கும் ஒரு நப்பாசை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். அரசியல் சட்டமைப்புக்கு எதிராக இருக்கும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்று ஆவேசமாக சூளுரைத்தார் அமைச்சர் துரைமுருகன்.