உங்களது மொபைலில் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கிக்கணக்கு விவரங்கள் வரை அனைத்தும் இருக்கும். இதனிடையே ஒரு மெயில் ஐடி, பாஸ்வேர்டு என எது கிடைத்தாலும் அதை வைத்து அடுத்தடுத்து அவர்களின் சித்து விளையாட்டை ஹேக்கர்களால் அரங்கேற்ற முடியும். உங்கள் போனுக்கு வரக்கூடிய லிங்குகளை கிளிக் செய்வதன் வாயிலாக, தேவையற்ற செயலிகளை பதிவிறக்குவதன் மூலம், மொபைலுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும்போது, பொது இடங்களில் சார்ஜ் செய்யும்போது என பல வழிகளில் ஹேக்கர்களால் தங்களது மொபைலுக்குள் நுழைய முடியும். அனைத்து கோணங்களிலும் கவனமாக இருந்தால் மட்டும்தான் உங்களால் ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க இயலும்.

இந்நிலையில் எப்பிஐ, அமெரிக்கர்களுக்கு பொதுயிடங்களில் இருக்கும் சார்ஜ் போர்ட்டல்களில் சார்ஜ் செய்யவேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது. கடந்த 2011-ம் வருடம் பிரபலமாக இருந்த ஜூஸ் ஹேக்கிங் எனப்படும் பொது இடங்களில் உள்ள யுஎஸ்பி போர்ட்டல்கள் வாயிலாக மொபைல்கள் ஹேக்கிங் செய்யப்படுவது மீண்டும் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் பொருத்தி இருக்கும் போர்ட்டல்கள் வழியே நீங்கள் சார்ஜ் செய்யும்போது, உங்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே மொபைலில் இருக்கும் அனைத்து தகவல்களையும் அவர்களால் திருடிக்கொள்ள முடியும் என எச்சரிக்கப்படுகிறது.