திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இந்நிலையில் கூத்தங்குடி பாத்திமா நகரில் வசிக்கும் டெனிலா(28) என்பவர் தனது 5 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் திடீரென அலுவலகம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது டெனிலா கூறியதாவது, எனக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் என ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றதால் குழந்தைகளை பராமரிக்க மாதாந்திர நிவாரணம் கூட இல்லாமல் சிரமப்படுகிறேன். எனது கணவரிடம் இருந்து நிவாரணம் வாங்கி தர கோரி கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார். இதனையடுத்து அவரை போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.