சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஜானகிராமன் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஞானகுமாரன் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கார்த்திகேயன் சேலையூர் கேம்ப் ரோடு பகுதியில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் மகாலட்சுமி நகர் சிட்லபாக்கம் அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கார்த்திகேயன் கீழே விழுந்ததால் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து தனக்கு விபத்து நடந்தது குறித்து மாமாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு கார்த்திகேயன் மயங்கினார். அதன் பிறகு அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது.

இந்நிலையில் கார்த்திகேயனுக்கு உதவாமல் ஒருவர் அவரது செல்போனை திருடி சென்றதால் உறவினர்கள் இரவு முழுவதும் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் கார்த்திகேயன் மயங்கி கிடந்ததை பார்த்து பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி கார்த்திகேயன் உடலுக்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.