கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சைலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை சைலேஷ் அணுகியுள்ளார். அப்போது சையத் உள்ளிட்ட சிலர் சைலேஷிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு 3 லட்ச ரூபாயை வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் அவர்கள் காலம் தாழ்த்தியுள்ளனர்.

இதனால் சைலேஷ் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று சையத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சையத் உட்பட சிலர் ஒரு குழுவாக செயல்பட்டு நிறுவனத்தை நடத்தி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களிடம் 91 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.