விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் புத்துப்பட்டு இலங்கை தமிழர் குடியிருப்பில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி வினோத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் வந்தது. இதனால் வினோத் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள் ஒரு லிங்கை அனுப்பியுள்ளனர். அதனை உண்மை என்ற நம்பி வினோத் அந்த லிங்கை திறந்து பாஸ்வேர்டு கொடுத்து ஐடியை பதிவேற்றம் செய்துள்ளார். முதலில் ஆயிரம் 1000 ரூபாய்  முதலீடு செய்தவுடன் வினோத்துக்கு 1200 ரூபாய் கிடைத்தது.

இதனையடுத்து 3000 ரூபாய் முதலீடு செய்தவுடன் 4,200 ரூபாய் கிடைத்தது. இதனால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வினோத் 9 லட்சத்து 40 ஆயிரத்து 200 ரூபாய் வரை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி அவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் வினோத் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.