அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் வாஹிதா பானு(53) என்பவர் உதவி கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் தி.மு.க ஒன்றிய செயலாளர், ஒப்பந்ததாரருமான மணிமாறன் என்பவர் சாலை மற்றும் களம் அமைத்தல் வெளியிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பானு ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் என்ற வகையில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மணிமாறனிடம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதுகுறித்து மணிமாறன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி மணிமாறன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பானுவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பானுவை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.