கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி சாவடி புதுக்கடை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசன்(25) என்ற மகன் உள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டாம் தேதி அன்பரசன் காணாமல் போய்விட்டார். இது குறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிலர் அன்பரசனின் தோளில் கை போட்டு அழைத்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சந்தோஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது புதுச்சேரியை சேர்ந்த ஜோசப், அய்யனார் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இருவரும் மீதும் பல்வேறு வழக்குகள் இருக்கிறது. அவ்வபோது அய்யனார் எங்கெல்லாம் செல்வார்? என்னென்ன செய்வார்? என்ற தகவலை அன்பரசன் ஜோசப்பிடம் கூறி வந்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த அய்யனார் அன்பரசன் தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாக நினைத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி அய்யனார் தரப்பை சேர்ந்த சந்தோஷ் உள்பட 5 பேர் மது குடிப்பதற்கு அன்பரசனை அழைத்து சென்று கட்டையால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் உடலை சிங்கிரிகுடி சுடுகாட்டு அருகே சவுக்கு தோப்பில் புதைத்தது தெரியவந்தது.

இதனால் கடலூர் தாசில்தார் விஜய் ஆனந்த் முன்னிலையில் போலீசார் நேற்று அன்பரசனின் உடலை தோண்டி எடுத்தனர். இதனையடுத்து மருத்துவக் குழுவினர் அன்பரசனின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மற்ற நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.