திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பாலசுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மவுலீஸ்வரன்(15) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுவன் காலை வணக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளான். இதனையடுத்து நேற்று மதியம் 10- ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த போது சில மாணவர்கள் சிறு, சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோபத்தில் 3 மாணவர்களும் மவுலீஸ்வரனை கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் நிலைதடுமாறி மவுலீஸ்வரன் மரத்தில் முட்டி கீழே விழுந்ததால் தலையில் படுகாயம் ஏற்பட்டு அலறி துடித்தார். இதனை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவன் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மவுலீஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோரும், உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலையில் தொடர்புடைய அந்த 3 மாணவர்களையும் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.