இன்ஸ்டாகிராம் உட்பட பிற சமூக வலைதளங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசக்கூடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

உலகில் மிகப்பெரிய பணக்காரராக மாற வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் சிலர். அதேபோல பணக்காரர்  போல் வாழ வேண்டும் என ஆடம்பரம்  மீது மோகம் கொண்டு அதற்காக காலம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் பலர். இவர்களுக்கு மத்தியில் எதுவும் நிரந்தரமில்லை இருக்கும் வரை பிறருக்கு உதவி செய்து வாழ்வோம் என பொதுநலம் கொண்ட சிலர்  என அனைவரையும் உள்ளடக்கியது தான் இவ்வுலகம். இதில் பொதுநலத்துடன் வாழக்கூடிய நபர்கள் மிகவும் சொற்பமாகவே காணப்படுவார்கள்.

அப்படி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  உலா வந்து கொண்டிருக்கிறது. அதில்,  அப்துல் கலாம் ஐயா அவர்கள் 2020இல் இந்தியா வல்லரசாக மாறும் என குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போல் நடக்கவில்லை இருப்பினும், பசுமை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதும் அவருடைய மற்றொரு கனவாக இருந்தது. அந்த கனவை  நிறைவேற்ற நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

நாள் ஒன்றுக்கு ரூபாய் 1500 சம்பாதிக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுகிறேன்  அதில் ரூபாய் 500 எனது குடும்பத்திற்கு போதுமானது. மீதமுள்ள பணத்தை சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்கு சாப்பாடு வாங்கித் தரவும்,  மரக்கன்றுகளை வாங்கி நடுவதற்காகவும் பயன்படுத்துவேன். ஏராளமான பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மரங்களை நட்டுள்ளேன்.

சுமார் 2.5 லட்சம் என்ற அளவில் மரங்களை நட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பூமிக்கு வரும்போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை, போகும் போது யாரும் எதையும் கொண்டு போகப் போவதுமில்லை. கோடி ரூபாய் சம்பாதிப்பதில் இருக்கும் சந்தோஷத்தை விட, பிறருக்கு  உதவுவதே  எனக்கு பேரின்பம் என அவர் தெரிவித்துள்ளார். இவருடைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.