தென்காசி மாவட்டத்தில் உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக சத்யராஜ் என்பவர் பணியில் இருக்கிறார். இவர் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தது. இந்நிலையில் குத்துக்கல்வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டி வருகிறார். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ரஜினி என்பவர் வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வீடு கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்றால் 46 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என சத்யராஜ் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து ரஜினி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரஜினி சத்யராஜிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சத்யராஜை கையும் களவுமாக கைது செய்தனர்.