இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் தங்களது சுய விவரங்களை இணைய மூலமாக அவர்கள் பதிவு செய்யுமாறு இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. போர் தீவிரமடையும் நிலையில் இந்த நடவடிக்கையை இந்திய அரசாங்கம் எடுத்து இருக்கிறது.

ஐந்தாவது நாளாக பதற்றமான சூழலில்தான் இஸ்ரேல் இருந்து வருகிறது. இருபக்கமும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளக்கூடிய நிலையில்,  ஏற்கனவே 2000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். பல வெளிநாட்டு வாழ் மக்களும் அங்கு  இருக்கக்கூடிய நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக இந்தியர்கள் சுமார் 18,000 மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கக்கூடிய நிலையில்,  அவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது. அந்தவகையில் இஸ்ரேலில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி  இஸ்ரேலில் இருக்கக்கூடிய இந்தியர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் நாட்களில் போர் தீவிரமடையும்பட்சத்தில் அங்கு இருக்க கூடிய இந்தியர்களை வெளியேற்றுவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ளும். இந்த விவரங்களின் அடிப்படையில் மிக எளிதாக அந்த பணி மேற்கொள்ளப்படும் என்ற வகையில் தற்போது சுயவிவர பதிவு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் இந்திய தூதரகம் சார்பாக  24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தற்போது அங்கு இருக்கக்கூடிய இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.