சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணம் மையம் அமைப்பது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், முதன்மைச் செயலாளர், மருத்துவ கல்வியியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதாவது மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2021-ம் ஆண்டு கட்டிடத் தொழிலாளியான முத்துக்குமார் என்பவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வேலை செய்யும்போது கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டனர். அவர் இறக்கும் தருவாயில் காலில் மிகுந்த வலி மற்றும் வேதனையோடு உயிரிழந்தார்.
சில தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய், நீரிழவு மற்றும் எச்ஐவி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணம் மையங்கள் மற்றும் வலி நிவாரண மருந்துகள் இருக்கிறது. இதே போன்று அரசு மருத்துவமனைகளிலும் வலி நிவாரண மையங்கள் மற்றும் வலி நிவாரணம் மருந்துகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது மனு குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், முதன்மை செயலர் மற்றும் மருத்துவ கல்வியியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.