ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒரு பெண் தனது வாழ்நாள் சேமிப்பாக இருந்த ரூ.4.3 கோடி (780,000 டாலர்கள்) பணத்தை ஆன்லைன் மோசடியில் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் 57 வயதான அனெட் ஃபோர்ட், மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். இவரது 33 ஆண்டுகால திருமணம் முடிவுக்கு வந்தபோது, தனக்கென ஒரு உறவைத் தேடும் நோக்கத்தில் “Plenty of Fish” என்ற டேட்டிங் தளத்தில் இணைந்தார். அங்கு ‘வில்லியம்’ என்ற நபருடன் தொடர்பு கொண்டு, அவர் மீது நம்பிக்கை வைத்தார்.

3 மாதங்களில், வில்லியம், தனது பணத்தை மலேசியாவின் கோலாலம்பூரில் திருடியதாகக் கூறி ரூ.2,75,000 (5000 டாலர்கள்) உதவி கேட்டார். “நான் பணத்தை அனுப்பிய பிறகு, அவர் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினார். அவரது மருத்துவச் செலவுக்காக மேலும் 5000 டாலர்கள் செலுத்தும்படி கூறினார். இதற்குப் பிறகு, ஓட்டல் கட்டணம், வேலைக்காரர்களுக்கான சம்பளம் போன்ற காரணங்களை கூறி தொடர்ச்சியாக பணம் கேட்டார்” என்று அனெட் ஃபோர்ட் தெரிவித்தார். இவ்வாறு பல தடவைகள் பணம் அனுப்பியதும், இறுதியில் ரூ.1.6 கோடி (300,000 டாலர்கள்) பணத்தை இழந்தபோதுதான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

ஆஸ்திரேலிய காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த பதிலும் வரவில்லை. பின்னர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மேலும் ஒரு மோசடியின் சிக்கலில் சிக்கினார். இந்த முறை, ‘நெல்சன்’ என்ற பெயரில் ஒரு நபர் ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்டு, அம்ஸ்டர்டாமில் வாழ்கிறேன் என்று கூறினார். அவர் அமெரிக்காவின் FBI-யில் உள்ள தனது நண்பருக்கு உதவியாக 2500 டாலர்கள் அனுப்ப வேண்டுமென கேட்டார். அனெட் ஃபோர்ட் முதலில் மறுத்துவிட்டாலும், அந்த நபர் ஒரு பிட்காயின் ATM மூலம் பணம் செலுத்துமாறு கூறினார். அவரது கணக்கில் மறைமுகமாக பணம் வரவும் செல்லவும் செய்துவிட்டதால், அவர் புரிந்துக்கொள்ளும் முன், தனது கணக்கில் இருந்த ரூ.1.5 கோடி (280,000 டாலர்கள்) பணத்தையும் இழந்துவிட்டார்.

தனது முழு சொத்துக்களையும் இழந்த அனெட் ஃபோர்ட், ஆஸ்திரேலிய மக்களை இப்படியான மோசடிகளில் விழக்கூடாது என்று எச்சரிக்கிறார். “அவர்கள் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உங்களை மயக்குவார்கள். ஆனால், இறுதியில் உங்கள் பணத்தை பறித்து விட்டு உங்களை திருட்டு பாதையில் விட்டுவிடுவார்கள்” என்று அவர் வேதனையுடன் கூறினார். கடந்த மாதம், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தனது 20 ஆண்டுகால நண்பரால் ரூ.98.5 லட்சம் (92,300 பவுண்டுகள்) பணத்தை மோசடி செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு ஆன்லைன் மோசடிகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால், மக்களிடையே விழிப்புணர்வு தேவை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.