தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தங்களுடைய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய அவசர சட்டம் இயற்றியது. ஆன்லைன் தடை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டார். அதன் பிறகு ஆளுநர் சில விளக்கங்களை கேட்டிருந்த நிலையில் தமிழக அரசும் உரிய விளக்கங்களை கொடுத்திருந்தது.

இந்நிலையில் ஆன்லைன் தடை மசோதாவை 142 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் உரிமை மாநில அரசுக்கு இல்லை எனவும் அந்த அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது எனவும் ஆளுநர் ரவி கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சட்டப்படி மாநில அரசு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது தான் முறையாகும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.