அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஊர் நாட்டாமையான கோவிந்தசாமி கடந்த மாதம் 22-ஆம் தேதி வயலில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அப்போது முதியவரின் கையில் அணிந்திருந்த 1 பவுன் மோதிரம், 5 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பதாக கோவிந்தசாமியின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வி.கைகாட்டி பகுதியில் இருக்கும் அடகு கடைகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நகையை விற்பனை செய்த ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த நகையை மீட்டு விசாரித்த போது அது கோவிந்தசாமி அணிந்திருந்த மோதிரம் என்பது உறுதியானது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் விளாங்குடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடன் பிரச்சனை மற்றும் குடும்ப வறுமையால் சிரமப்பட்டுள்ளார். இவர் உருட்டு கட்டையால் கோவிந்தசாமியை தாக்கி தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.