அமெரிக்காவின் பிலேடெல்பியா பகுதியில் எவின் ஜகன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்து மூக்கு பெரியதாக இருந்ததால் பள்ளி மற்றும் தான் வசித்து வரும் பகுதிகளில் உள்ள அனைவரும் இவரை கேலி செய்து வந்தனர். அதோடு அவர் படித்த பள்ளியில் அவரை பினோக்கியா, டூக்கான், விட்ச் போன்ற மோசமான பெயர்களால் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனால் தன்னம்பிக்கை இழந்து வாழ்ந்து வந்த இவர் 23 வயதில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண வாழ்க்கையும் அவருக்கு துன்பத்துடனும், ஏமாற்றத்துடனும் அமைந்ததால் அவர் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் வாழ்க்கையை வெறுத்தார். இதைத்தொடர்ந்து பெரிய மூக்கால் சமூகத்தில் பாதிக்கப்பட்டு வந்த இவர் கடந்த நவம்பர் மாதம் ரூ.9.1 லட்சம் செலவில் மூக்கை ஒழுங்குபடுத்தும் சிகிச்சை செய்து கொண்டு தனது வாழ்வின் முக்கிய மாற்றத்தை தொடங்கினார். இந்த சிகிச்சைக்கு பிறகு டிசம்பர் மாதம் விவாகரத்து மனு தாக்கல் செய்த இவர் “இந்த மூக்கு தான் எனக்கு தேவையான தன்னம்பிக்கையையும் சுதந்திரத்தையும் தந்தது.

இப்போது என் வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக செலவிடுகிறேன்” என்று சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அவருடைய இந்த பதிவை 4.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். தற்போது விவாகரத்து ஆன நிலையில் தனிமையில் வாழும் எவின் தன்னுடைய உள்ளமும், வெளியும் சந்தோஷமாக மாறி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் திருமணத்தில் இருந்து வெளியேறி புத்தம் புதிய வாழ்வை தொடங்கும் இவரது பதிவு பலருக்கும் தாக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.