வளர்ப்புத்தாய் நரபலி கொடுக்க இருந்தாக சொல்லி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய  பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல் செய்த மனுவில், தன் வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர்.

இதனால் தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்து உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். முன்பே தன் 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க யாருக்கும் தைரியமில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த வழக்கு விசாரணையில் பெண்ணுக்கும், அவருக்கு உதவியவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். நரபலி தொடர்பாக ஷாலினி புகாரளித்த விவகாரத்தில் போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.