
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்ற முக்கிய நடிகர்கள் இணையும் இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அனிருத் இசையமைத்த ‘மனசிலாயோ’ பாடல் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், இதனைப் பார்த்த சில ரசிகர்கள், இது ரஜினிகாந்த் நடிக்கும் கமர்ஷியல் படங்களிலிருந்து வேறுபட்டதாக இருப்பதைக் குறிப்பிட்டனர். டீசரில், அமிதாப் பச்சனின் குரலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் டப்பிங் செய்திருந்தார். ஆனால், அமிதாப் பச்சனின் குரலுக்குப் பொருந்தவில்லை என சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, படக்குழு அமிதாப் பச்சனின் குரலை ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தின் மூலம் தமிழில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது ரசிகர்களிடையே அமிதாப் பச்சன் குரல் இப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் ஏ.ஐ மூலம் பயன்படுத்தப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.