உதகை மைனலை அருகே உள்ள அரக்காடு கிராமத்தில், தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு வன விலங்கு தாக்கியதில் அஞ்சலை என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். வன விலங்கு பிடிபடும்வரை மாலை 6 மணிக்குப் பிறகு வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வனச்சரகர் சசிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பெண்ணைத் தாக்கிய வன விலங்கு எப்போது, எங்கு தோன்றும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைப் பறிக்க செல்லக் கூடாது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது, பள்ளி மாணவர்களை தனியாக அனுப்பக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் வன விலங்கைப் பிடிக்க தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தேயிலைத் தோட்டத்தில் கூண்டு வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தையடுத்து, உயிரிழந்த அஞ்சலையின் குடும்பத்துக்கு உதவியாக முதல்கட்ட நிவாரணத் தொகையாக ரூ.50,000 வழங்கப்பட்டதாக உதகை கோட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வன விலங்குகள் கிராம பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.