இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் பதிவாகியுள்ளது. தற்போது நித்தியானந்தா தேடப்படும் ஒரு குற்றவாளியாக இருக்கும் நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தனக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கி அதற்கு கைலாசா என பெயர் வைத்துள்ளார். இந்த கைலாசா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இன்னும் சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஐநா சபைக்கான கைலாசாவின் தூதுவராக விஜயபிரியா என்பவரை நித்தியானந்தா நியமித்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டார்.
விஜய பிரியா கைலாசா நாட்டின் அமெரிக்க பிரதிநிதியாக கலந்து கொண்டார். அப்போது விஜய பிரியா நித்தியானந்தா தன்னுடைய தாய் நாட்டினால் வேட்டையாடப்படுவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் விஜய பிரியா யார் என்ற சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014-ம் ஆண்டு கனடாவில் உள்ள மனிடோபா பல்கலைக்கழகத்தில் விஜய பிரியா நுண்ணுயிரியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் முடித்துள்ளார். இவருக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, கிரியோல் மற்றும் பிட்டின் ஆகிய மொழிகள் தெரியும். கடந்த 2022-ம் ஆண்டு விஜய பிரியாவை கைலாச நாட்டின் ஐநா சபை தூதுவராக நித்தியானந்தா நியமித்தார். விஜய பிரியா தன்னுடைய கைகளில் நித்தியானந்தாவின் உருவத்தை பச்சை குத்தி வைத்துள்ளார். மேலும் விஜயபிரியா முகநூலில் நித்தியானந்தாவை புகழ்ந்து ஒரு கவிதை எழுதியுள்ளார்.