அசாமின் கவுகாத்திக்கு அப்பால் என்னும் கருத்தியலில் இந்திய ரயில்வேயின் பாரத் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் ஐந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகிற 21-ஆம் தேதி சுற்றுலா பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த ரயில் டெல்லி சத்தர் ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு முதலில் கவுகாத்தியில் நிற்கிறது. அங்கு காமக்ய கோவில், உமானந்தா கோவில் தரிசனங்களுக்கு பின் பயணிகள் பிரம்மபுத்திராவில் சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம். அதனை தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகர்லாகுனுக்கு ரயில் செல்கிறது. அதன்பின் சிவசாகர், சிவடோல் மற்றும் பாரம்பரிய தளங்களுக்கு செல்கிறது.

இதனையடுத்து ஜோர் ஹாட்டில் உள்ள தேயிலை தோட்டங்களை சென்று சுற்றிப் பார்க்கலாம். மேலும் காசிரங்கா தேசிய பூங்காவில் பயணிக்கலாம். அதனைத் தொடர்ந்து சில இடங்களுக்கு சென்று விட்டு நாகலாந்து மாநிலத்தின் பீமாபூருக்கு ரயில் செல்கிறது. அங்கிருந்து கோகிமாவுக்கு பேருந்துகள் மூலம் பயணிகள் அழைத்து  செல்லப்படுகின்றனர். சுமார் 15 நாட்கள் பயணிக்கும் இந்த சுற்றுலாவின் முழு பயண தூரம் 5,800 கிலோமீட்டர் ஆகும். இந்த ரயிலில் பயணிகளுக்கு உணவு உட்பட அனைத்து விதமான வசதிகளும் செய்யப்படுகிறது. அதே போல் கட்டணத்தை பொருத்தமட்டில் இரு அடுக்கு ஏசி நபர் ஒருவருக்கு ரூ.1,06,990, முதல் வகுப்பு ஏசிக்கு ரூ.1,31,990, அதேபோல் ஏசி கூபேக்கு ரூ.1,49,290 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.