நகம் கடிப்பது நாகரிகமற்ற மற்றும் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் பழக்கம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நகம் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிர தன்மையை உணராமல் அந்த பழக்கம் இருப்பவர்கள் அதை தொடரவே செய்கிறார்கள். நகங்களில் பலவிதமான பாக்டீரியாக்கள் இருக்கும். அவ்வபோது கை கழுவினால் கூட அவற்றை முழுமையாக சுத்தம் செய்வது சாத்தியம் இல்லை.

அப்படி இருக்கையில் நகத்தை கடித்துக் கொண்டே இருப்பதால் உடலை தாக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். கட்டுப்படுத்தாத நாள்பட்ட நகம் கடிக்கும் பழக்கத்தால் திசுக்கு சேதமடைந்து உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இதற்கு முறையான சிகிச்சை அளிக்க தவறும் பட்சத்தில் செப்சிஸ் தொற்று, செப்டிக் ஷாக் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலை உருவாகிறது. நகத்தை கடித்துக் கொண்டே இருப்பது பற்களும் பாதிப்படைய காரணமாக இருக்கின்றது.

நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிட முதற்கட்டமாக வாரம் ஒரு முறை கட்டாயம் நகம் வெட்டி பராமரிக்க வேண்டும். தொடர்ந்து நகம் கடிப்பவர்கள் வேப்பிலை பேஸ்ட்டை நகத்தில் லேசாக தடவை கொண்டால் நகத்தை வாயில் வைக்கும் போதெல்லாம் கசப்பான உணர்வு ஏற்பட்டு விரைவில் இந்த பழக்கத்திலிருந்து விடுபட ஏதுவாக அமையும். கை கழுவுவது மட்டுமல்லாமல் நகங்களையும் சுத்தமாக பராமரித்தல் பல நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.