மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன்லால். இவருடைய வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டதால், இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும் இதுபற்றிய வழக்கு கேரளா பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் யானை தந்தம் வைத்திருக்க தன்னிடம் முறையான சான்றிதழ் உள்ளதாகவும், தந்தத்திற்காக எந்த யானையையும் கொழை செய்யவில்லை என்றும் மோகன்லால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆகவே இவ்வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அவர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக நடிகர் மோகன்லால் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, அது விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றமானது, இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றமானது தள்ளுபடி செய்து உள்ளது. அதோடு யானை தந்தம் தொடர்பான வழக்கை மீண்டுமாக விசாரணை மேற்கொள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.