மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அன்சார் அகமது என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி தஹிரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இத்தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் தஹிராவுக்கு கை, தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது குறித்து காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜாமின் வழங்க கோரி மத்திய பிரதேச ஐகோர்ட்டில் அன்சார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது பற்றிய விசாரணை வந்தபோது துணை காவல் ஆணையாளர் அபினய் விஸ்வகர்மா மற்றும் விஜயநகர் காவல் நிலைய அதிகாரி சந்திரகாந்த் பட்டேல் ஆகியோர் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகினர். அப்போது இந்த வழக்கில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சான்றுகள் அழிந்து விட்டன என்று கூறினர். இதனை நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது பற்றி அதிகாரி அபினய் கூறும் போது பிளாஸ்டிக் டப்பாகளில் இந்த வழக்கின் சான்றுகள் வைக்கப்பட்டு இருந்தன எனவும், குளிர்காலத்தின் போது எலிகள் அவற்றை அழித்து விட்டன எனவும், அதனுடன் தொடர்புடைய வேறு 28 மாதிரிகளையும் இனி பயன்படுத்த முடியாது என்றும் கூறினார்.

இதனை கேட்ட நீதிபதி வழக்கின் சான்றுகளை பாதுகாப்பாக வைக்காததற்காக கடுமையாக சாடினார். மேலும் இதுபோன்ற சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெறாத வகையில் காவல்நிலையங்களில் உள்ள அனைத்து சேமிப்பு பகுதிகளையும் ஆய்வு செய்யும்படி மத்திய பிரதேச காவல்துறை தலைவருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல் நிலைய அதிகாரியிடமும், சேமிப்பு பகுதி பொறுப்பு அதிகாரியிடமும் துறை சார்ந்த விசாரணை நடத்தப்படும் என்று கோர்ட்டில் காவல் உயர் அதிகாரி அபினய் உறுதி அளித்துள்ளார்.