கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.பெத்தாங்குப்பத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் பிரகாஷை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை தனியார் நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் ஆன்லைன் மூலமாக உங்களுக்கு 10 லட்ச ரூபாய் கடன் தருகிறோம், எனவே உங்களது வங்கி கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கூறுங்கள் என தெரிவித்தார்.

இதனை உண்மை என்று நம்பிய பிரகாஷ் தனது வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை மர்ம நபரிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் பிரகாஷின் செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வந்தது. அதனையும் மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரகாஷின் வங்கி கணக்கில் இருந்து 97 ஆயிரத்து 542 ரூபாய் எடுத்ததற்கான குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ் உடனடியாக கடலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு தலைமையில் போலீசார் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் பிரகாஷ் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் முடக்கப்பட்டது. உடனடியாக வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் பணத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து பணம் மீட்கப்பட்டதற்கான வங்கி ஆவணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பிரகாஷிடம் ஒப்படைத்தார்.