கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அண்ணன் தங்கையான பீம், குடியா ஆகியோர் அடிக்கடி குளிர்பானம் அருந்துவதற்காக சென்றனர். அவர்கள் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி சுதாகரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிக்க முயன்றனர்.

இதுகுறித்து சுதாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பீம், குடியா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அண்ணன் தங்கையான இருவரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு துணி வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளனர்.

அப்போது சிறிய கடையின் உரிமையாளர்களிடம் நட்பாக பழகி, குழி தோண்டும் போது புதையல் கிடைத்ததாகவும், அதனை பரிசோதனை செய்ய பயமாக உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து ஒரு கிராமுக்கும் குறைவான தங்கத்தை கடைக்காரர்களிடம் கொடுத்து பரிசோதனை செய்ய சொல்கிறார்கள்.

அதனை கடைக்காரர்கள் பரிசோதனை செய்து உண்மையான தங்கம் எனக் கூறியதும், குறைந்த விலைக்கு அதனை கொடுக்க ஒப்புக்கொள்கின்றனர். இவ்வாறாக 2 கிலோ வரை அவர்கள் தயாரித்து வைத்துள்ள போலி தங்கத்தை கொடுத்து கடைக்காரர்களை ஏமாற்றி 5 லட்ச ரூபாய் வரை வாங்கிக்கொண்டு தலைமறைவாகினர். இவ்வாறு அண்ணன், தங்கை இருவரும் சேர்ந்து பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.