கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், சென்னை தலைமை செயலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும் கலைச்செல்வியிடம் கூறினார். மேலும் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.

இதனை நம்பி கலைச்செல்வி சரவணக்குமாரிடம் 23 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். அதன் பிறகு சரவணகுமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது. இது தொடர்பாக கலைச்செல்வி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சரவணகுமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி, தாசில்தார், அரசு துறையில் உயர் அதிகாரி என கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.