கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எச் ரோடு பகுதியில் அப்துல் சமது என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அப்துல் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளார். சிறிது நாட்கள் கழித்து அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஆன்லைன் மூலம் எங்கள் நிறுவனத்தில் நீங்கள் பொருட்கள் வாங்கியதால் குலுக்களில் உங்களுக்கு சொகுசு கார் பரிசாக விழுந்தது.

அதனை பெற்றுக் கொள்ள உங்களுக்கு விருப்பமா என கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர் காருக்கு இன்சூரன்ஸ், பதிவு கட்டணம் என 50 ஆயிரம் ரூபாய் அனுப்புமாறு கேட்டுள்ளார். அதனை நம்பி அப்துல் அவர்கள் அனுப்பிய லிங்கை பயன்படுத்தி பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகும் வெவ்வேறு காரணங்கள் கூறி அவர்கள் பணம் வாங்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து அப்துல் கேட்டபோது உங்களிடம் காரை கொடுக்கும்போது அந்த பணத்தையும் சேர்த்து கொடுத்து விடுவோம் என தெரிவித்தனர். இவ்வாறாக அப்துலிடமிருந்து அவர்கள் 12 லட்சம் ரூபாய் வரை வாங்கிவிட்டனர். அதன்பிறகு காரையும் கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்துல் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.