அகமதாபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் திங்கட்கிழமை மதியம் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கு எதிராக FIR பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவில், ஒரு மருத்துவமனையின் மூடப்பட்ட அறையில் பெண்கள் பரிசோதனை நடத்துவது போலவும், அங்கு பெண்களுக்கு இன்ஜெக்ஷன் மூலமாக மருந்துகள் செலுத்தப்படுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வீடியோ குறித்த விசாரணையில் குற்றவாளிகள் TELEGRAM குழு மூலமாக YOUTUBE சேனலுடன் இணைத்திருப்பது தெரிந்துள்ளது. இந்த YOUTUBE சேனலில் ஏழு வீடியோக்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் TELEGRAM குழுவின் மூலம் விபரங்கள் அனுப்பப்பட்டு YOUTUBE வீடியோக்கள் சந்தா கட்டி பார்க்கும் வகையிலும் செயல்படுத்தி உள்ளனர். இதில் உள்ள சில வீடியோக்கள் படப்பிடிப்பாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளன என்று அகமதாபாத் சைபர் கிரைம் உதவி ஆணையர் ஹர்திக் மகாடியா அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சைபர் கிரைம் டிசிபி லவீனா சின்கா கூறியதாவது, “இந்த வீடியோக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோக்கள் பதிவேற்றிய நபர்களின் விவரங்களை வழங்க YOUTUBE மற்றும் TELEGRAM நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த மருத்துவமனையிலும் இது தொடர்பான தகவல்கள் இல்லை. இந்த TELEGRAM குழு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. YOUTUBE சேனல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் உள்ள மருத்துவ பரிசோதனை செய்யப்படும் பெண்ணும், செவிலியரும் குஜராத்தி மொழியில் உரையாடும் காட்சிகள் காணொளியில் உள்ளன. ஆனால் மருத்துவமனை எது என்பது குறித்து எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.