கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா பாலம் அருகே இருக்கும் பிரபல தியேட்டரில் பாலமுருகன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தியேட்டரில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கான தொகையை உரிமையாளர் கணக்கீடு செய்த போது குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உரிமையாளர் ஊழியர்களிடம் விசாரித்த போது பாலமுருகன் தின்பண்டங்களுக்கு ரசீது போடாமல் ஊழியர்களுடன் சேர்ந்து முறை கேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பாலமுருகன் 7 ஊழியர்களுடன் இணைந்து தின்பண்டங்கள் விற்பனையான தொகையை ரசீது போடாமல் கையாடல் செய்ததும், வங்கி மூலம் பாலமுருகன் அந்த பணத்தை பிற ஊழியர்களுக்கு பிரித்து அனுப்பியதும் தெரியவந்தது. அவர்கள் சுமார் 20 லட்ச ரூபாய் வரை கையாடல் செய்துள்ளனர். இதனால் பாலமுருகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.