சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா சாலை முதல் தெருவில் அஸ்வினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி அஸ்வினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் அஸ்வினி “மிஸ் யூ அம்மா நான் தவறானவள் அல்ல” என ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சமூக வலைதளம் மூலம் பழகிய மர்ம நபர் பணம் கேட்டு அஸ்வினியும் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதாவது சமூக வலைதளம் மூலம் லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி ஒரு வாலிபர் அஸ்வினிக்கு அறிமுகம் ஆனார். திடீரென ஒரு நாள் இந்த வாலிபர் நான் உன்னை காதலிக்கிறேன், தமிழ்நாட்டிற்கு வரும்போது உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன் என கூறினார்.

அதற்கு அஸ்வினி எனது குடும்ப சூழ்நிலைக்கு லண்டன் மாப்பிள்ளை ஒத்துவராது நாம் பழகுவதை நிறுத்தி விடலாம் என தெரிவித்தார். அதற்கு அந்த வாலிபர் நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உனக்கு பரிசுப் பொருட்கள் அனுப்பி வைக்கிறேன். அதனை வாங்கிக் கொள் என புகைப்படத்தை அனுப்பினார். அடுத்த சில நாட்களில் அஸ்வினியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் நாங்கள் வருமானவரி அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம்.

உங்களுக்கு லண்டனில் இருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதற்கு வரி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பி அஸ்வினி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தினார். ஆனால் அவர்கள் மேலும் பணம் கேட்டதால் அஸ்வினி அந்த பரிசு பொருள் வேண்டாம் என கூறினார். ஆனால் அந்த நபர் பரிசுப் பொருள் வேண்டாம் என்றால் உங்கள் வீட்டிற்கு போலீஸ் விசாரணைக்கு வரும் எனக்கூறி மிரட்டினார்.

இதனால் அச்சத்தில் அஸ்வினி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த மூசா என்பது தெரியவந்தது. அவர் டெல்லியில் இருக்கும் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.