தேசத்தந்தை மகாத்மா காந்தி அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி பிறந்தார். அவரது பிறந்த நாளை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஐநா பொது சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் பொது சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்டோபர் இரண்டாம் தேதியை ஐநா உறுப்பினர்கள் உலக அகிம்சை தினமாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. முதலாவது அகிம்சை தினம் 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 2- ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

அப்போதைய ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி முன் சகிப்புத்தன்மை இன்மையாலும் மோதல்களாலும் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எண்ணற்ற மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திர இந்தியா பிறப்பதற்கு காரணமான மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைகளை மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும் என கூறினார்.

அந்த காலகட்டத்தில் மட்டுமில்லாமல் இன்றைய சூழலிலும் அகிம்சை கொள்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தனது கொள்கையில் இருந்து கடைசி வரை மாறாமல் இருந்த காந்தியடிகள் உலக மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.